Friday 23 March 2012

தொலைந்த வாழ்க்கை


        அழுது அழுது கண்களில் நீரே வற்றி விட்டது அவளுக்கு. சாப்பாடு, தூக்கம் ஏதும் இன்றி அழுது கொண்டே இருக்கிறாள். தன் பெற்றோர் எவ்வளவோ கேட்டும் தன் பிரச்சனையை பற்றி எதுவுமே கூறவில்லை. அழுதழுது மயங்கிய அவளை மருத்துவமனையில் சேர்த்தனர். என்ன நடந்தது என்பதை அறிய அவளின் குழந்தையிடம் விசாரித்தனர். 4 வயதே நிரம்பிய அவனுக்கு என்ன சொல்ல தெரியும்.?? இருப்பினும் குழந்தை தன் மழலை மொழியில் “அம்மா!!அம்மா!!! அம்மா வை கெட்ட பாட்டி அடிச்சு போ” னு சொல்லிட்டா..
        குழந்தை சொன்னதில் மாமியாருக்கும் அவளுக்கும் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்த அவள் பெற்றோர் அவள் உடம்பு சரியான பின்பு அவளின் மாமியார் வீட்டிற்கு சென்று பிரச்சனையை பேசி தீர்த்து விட்டு வரலாம் என முடிவு செய்தனர். சற்று நேரம் கழித்து கண் விளித்து பார்த்தாள் மதி. அவளுக்கு குளுக்கோஸ் போட பட்டு இருந்தது.மறுநாள் அவளை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்து வீட்டில் ஓய்வு எடுக்க வைத்தனர்.
        மாலையில் மதியின் அப்பா விஸ்வநாதன் அவளை அழைத்து சமாதானம் செய்கிறார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாப்பிள்ளை உன் மேல் உயிரையே வைத்துள்ளார். எதற்கும் பயப்படாதே. ஒரு வாரம் நன்கு ஓய்வு எடு. நானும் அம்மாவும் வந்து சம்மந்தியிடம் பேசி உன்னை அங்கே விட்டு வருகிறோம் என்று சமாதானம் சொன்னார். எனினும் மதியின் மனது சமாதானம் ஆகவில்லை. அவள் அப்பாவை விட அவள் மாமியாரை பற்றி நன்கு அறிந்தவள். அதோடு பிரச்சனையின் தீவிரத்தை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து மனதிற்குள்ளேயே அழுதாள். அப்பொழுது மதியின் மாமனாரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. இங்கு ஒரு பிரச்சனை என்று சீக்கிரம் கிளம்பி வர சொன்னார். என்ன பிரச்சனை என்று தெரியாமலே மதி மேலும் கவலையில் வாடி துடித்தாள். உடனடியாக அவள் மாமியார் வீட்டுக்கு மூவரும் குழந்தையுடன் கிளம்பினர்.
          செல்லும் வழி எல்லாம் மனதிருக்குள்ளேயே அவள் பிரச்சனை அனைத்தும் ஓடியது. மதி வெங்கட் திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆகிறது. மதி மேல் வெங்கட்கும் வெங்கட் மேல் மதிக்கும் அளவு கடந்த பிரியம். சொர்க்கத்திலே உருவான ஜோடி என்றே கூற வேண்டும். அவர்கள் குழந்தை விஷயத்திலும் மிகவும் புண்ணியம் செய்தவர்களே. அழகான அறிவான ஆண் குழந்தை ஒன்று அவர்கள் சந்தோஷத்தை அதிக படுத்தியது.மதி குணத்திலும் ஒரு குணவதியாக இருந்தாள். அதனால் மாமனார் நாராயணனுக்கும் அவள் மீது எப்போதும் நல்மதிப்பே இருந்தது.வெங்கட் தங்கை சித்ராவும் அண்ணன்,அண்ணி செல்லமே.
          தான் பார்த்து கட்டி வைத்த பெண் தான் என்றாலும் மதி என்றாள் வெங்கட் அம்மா ஜானகிக்கு எப்போதும் பாகற்காய் தான். தன் பிள்ளையின் மேல் இருந்த அளவு கடந்த பாசமோ என்னவோ மதி என்ன செய்தாலும் குற்றம் என்றே உரைப்பாள். ஆரம்ப காலத்தில் வெங்கட் இதை சரி செய்ய அம்மாவிடம் மதி மேல் தவறில்லை என்று எடுத்து கூறி இருக்கிறான். அதையும் அவள் தப்பாகவே புரிந்து கொண்டு என்னை விட நேற்று வந்தவள் முக்கியமாகி விட்டாளா என்று சண்டைக்கு வருவாள். தான் எடுத்து கூறினால் சண்டை பெருசாகிறது என நினைத்து மதியே தான் குணத்தால் அம்மாவை மாற்றி விடுவாள் என்று நம்பினான். அவள் எவ்வளவோ பொறுமையாக போனாலும் ஜானகி மனம் மாறவே இல்லை.
        நாராயணன் பார்த்த ஆடை ஏற்றுமதி இறக்குமதி தொழிலையே வெங்கட்டும் பார்த்து கொண்டிருந்தான். நன்றாக சென்று கொண்டிருந்த தொழில் திடீரென நஷ்டம் அடைந்தது. இதை நினைத்து நினைத்தே நாராயணன் படுத்த படுக்கை ஆகி விட்டார். சேமிப்பில் இருந்த அனைத்து பணமும் அவரின் மருத்துவ செலவுக்கும் தொழிலை சரி செய்ய முயற்சி செய்தும் செலவானது. தொழிலும் சரியாகவில்லை. அப்பா உடல் நிலையிலும் முன்னேற்றம் இல்லை. வெங்கட் சோர்வாக வீட்டிற்கு வரும் போதெல்லாம் மதி மட்டுமே அவனுக்கு ஆறுதல் அளித்தாள்.
        வீட்டில் ஏற்கனவே நடு வீட்டில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த பிரச்சனை பாய் போட்டு படுத்து கொண்டது போல வெங்கட் தங்கை சித்ரா ஒரு இடியை இறக்கினாள். தான் ஒரு பையனை விரும்புவதாகவும் அவன் இல்லை எனில் தற்கொலை செய்வதாகவும் கூறினாள். அதிர்ச்சியடைந்த வெங்கட்டும் ஜானகியும் அந்த பையனின் பெற்றோரை வீட்டிற்கு வர சொல்லும்படி கூறினார்கள். அந்த பையனின் அப்பா பெரிய பணக்காரர். மிக நல்ல குடும்பமே!!.ஆனால் அவரும் சுயநலக்காரரே. சித்ராவை அவர்கள் வீட்டு மருமகள் ஆக்கி கொள்வதில் அவர்களுக்கு சம்மதமே!! அதோடு அவர்கள் குடும்ப பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாக கூறினார்கள். எல்லோர் முகத்திலும் சந்தோஷம்!!.
        ஆனால் அது ஒரு நிமிடம் நீடிக்கவில்லை. ஏனெனில் அதற்கு அவர்கள் விலையாக கேட்டது மதியின் வாழ்க்கையை!!அந்த பணக்காரருக்கு ஒரு கால் ஊனமான பெண் ஒருத்தி இருந்தாள். வேறு ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைத்தாள் அவன் தன்\ மகளை சந்தோஷமாக வைத்திருக்க மாட்டான். பணத்திற்காக மட்டுமே அவளை ஏற்று கொள்வான் என்பது அவரின் எண்ணம். அதனால் அவளை வெங்கட் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே சித்ராவின் திருமணம் நடக்கும் என்றார். வெங்கட் உடனே மறுத்து பேச அவனை அவன் அம்மா ஜானகி அடக்கினாள்.குடும்பத்தில் கலந்து பேசி முடிவு எடுத்து சொல்கிறோம் என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.
        தன் மகளின் நல்வாழ்க்கைகாகவும் குடும்ப சூழ்நிலைக்காகவும் வேண்டாத மருமகளை விரட்டுவது ஜானகிக்கு பெரிதாக படவில்லை. சித்ராவிற்கு இதில் வருத்தம் தான் என்றாலும் காதலனை விடும் நிலையில் அவள் இல்லை. மதி ஏதும் பேச முடியாதவளாய் அழுதாள். வெங்கட் நிலை தடுமாறி முடிவு எடுக்க முடியாமல் திணறினான். அவனின் முடிவு அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை அம்மாவும் தங்கையும் ஏற்பதாக இல்லை. வெங்கட் மன நிம்மதிக்காக சற்று நேரம் வெளியில் சென்று விட்டான்.அந்த நேரம் பார்த்து ஜானகி தன் மருமகளை திட்டி நீ வீட்டில் இருக்கும் வரை அவன் இன்னொரு திருமணத்திற்கு ஒதுக்கமாட்டான். நீ வீட்டில் இருந்து தொலைந்தால் தான் அவன் மனதை என்னால் மாற்ற முடியும் என்று கூறினாள். அதற்கு ஒத்துழைக்காத அவளை அடித்து குழந்தையுடன் வெளியில் தள்ளி கதவை பூட்டினாள்.
        என்ன செய்வதென்று அறியாத அவள் பொது தொலைபேசி நிலையத்தில் இருந்து வெங்கட் அலைபேசிக்கு அழைத்தாள். ஆனால் அவனோ அலைபேசியில் கூட அவனுக்கு நிம்மதி கிடைக்காது என்று எடுக்கவில்லை. காத்திருந்தும் வெங்கட் வருவதாக இல்லை. குழந்தையை கூட்டி கொண்டு தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பினாள் மதி.தன் கணவன் தன்னை கூட்டி செல்ல வருவான் என்ற நம்பிக்கையில்.யோசித்து முடிக்கும் போதே அவன் கணவன் வீடும் வந்தது. வந்த பின் தான் நடந்த அந்த கொடிய விஷயம் அவளுக்கு தெரிந்தது.
இரவு வீட்டிற்கு வந்த வெங்கட் விஷயம் அறிந்து மனைவியை கூட்டி வர கிளம்பினான்.அதை தடுக்க நினைத்து மண்ணெண்ணையுடன் வந்து நின்றாள் ஜானகி.தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாள். அவன் நிலை குலைந்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் இருந்தான். இந்நிலையில் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாள் ஜானகி. கல்யாண ஏற்பாடுகளை மிக பிரம்மாதமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.
       இந்நிலையில், தங்கைக்கு அவள் நினைத்த வாழ்க்கையை அமைத்து கொடுப்பதா?, அப்பாவின் உடல் நிலையை சரி செய்ய உதவுவதா,? அம்மாவின் மிரட்டலை சமாளிப்பதா,? குடும்ப சூழ்நிலைக்காக தன்னையே விற்பதா??? எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே நம்பி வந்த மதியையும், அவன் குழந்தையும் நினைத்து ஏங்கினான். அவன் அவளுக்கு கனவில் கூட துரோகம் செய்ய விரும்பாதவன். எப்படி நிஜத்தில் செய்வான்? அவர்கள் எல்லாம் அவனை மிரட்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதத்தை கையில் எடுத்தான். ஆம்!! தற்கொலை தான்\ தன் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே முடிவு என்று எண்ணி தன் கதையை தானே முடித்து கொண்டான்.
      எந்த பிரச்சனைக்கும் தற்கொலை முடிவு அல்ல. அந்த ஒரு நொடி நேர தப்பான முடிவினால் அவனுக்கு மட்டுமே ஒரு முடிவு கிடைத்தது. அவனையே நம்பி வந்த மதி தன் குழந்தையுடன் ஆதரவின்றி நின்றாள். அவன் குடும்பத்தை பார்த்து கொள்ளவும் யாரும் இல்லை இப்போது!! அனைத்து பிரச்சனைகளுக்கும் அவன் அம்மாவின் பேராசையும், அவனின் அவசர முடிவும் மட்டுமே காரணம்.......

என் ஃப்ரெண்ட் ட போல யாரு மச்சான்



          அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. மணி 9.25. அப்பொழுது இருவர் நிதானமாக அலுவலகத்தில் நுழைகின்றனர். அவங்க தான் இந்த அலுவலகத்தோட மேலதிகாரி. அப்படி ஆகணும்னு நினைச்சு முதல் நாள் சேர வந்திருக்காங்க. இருவருக்குமே மற்றவர்களை கவரும் விதத்தில் பேசுறோம் என்ற நினைப்பு உண்டு. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. (அடிக்கடி மொக்கை வாங்குறதே வேலையா வச்சுருந்தாங்க). மேலதிகாரியை சந்திக்க சென்ற பொழுது தாமதத்திற்கான காரணத்தை கேட்கிறார். அதற்கு வெங்கட் “சரியான நேரதிற்க்கு வந்திருந்தா பத்தோட பதினொன்ன எங்களையும் நினைச்சு அப்பவே மறந்துருவீங்க ஸார். அதான் லேட்” னு மொக்கையா ஒரு காரணத்தை சொல்ல மேலதிகாரியோ சின்ன கண்டிப்புடன் சில கோப்புக்களை கொடுத்து அவர்களை அனுப்பி வைக்கிறார்.
           முதல் நாளே அவர்கள் வேலையை நன்றாகவே ஆரம்பித்தனர். வெங்கட் கல்லூரியை போலவே நினைத்து குறட்டையை விட, செந்தில் தன் கனவு உலகத்திற்க்கு சென்றான். அப்போ எனக்கு வயசு 3.. தட்டு தடுமாறி நடக்க, பேச ஆரம்பிச்ச காலம் அது. தாத்தா எனக்கு தினமும் கதை, நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் சொல்லி கொடுப்பார். தாத்தா தான் எனக்கு சேவற்கொடி செந்தில்நாதன் னு ஒரு மொக்கை பெயர் வச்சார். ஒரு நாள் “உனக்கு என்ன வேணுமோ அதை பிள்ளையார் கிட்ட கேளு. பிள்ளையார் செய்து கொடுப்பார்” னு சொன்னார். கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் னு சாலமன் பாப்பையா சொல்லியிருக்கார் ல. அதாங்க நானும் அப்பவே பிள்ளையார் கிட்ட எனக்கு சாக்லேட் வேணும்னு வேண்டிக்கிட்டேன். அப்போ வீட்டுக்கு வந்த மாமா எனக்கு சாக்லேட் கொடுத்தார். நானும் ரொம்ப குஷியாகி தாத்தா சொன்னது நிஜம் தான் என்று நம்ப ஆரம்பித்தேன். அப்படியே செய்ய ஆரம்பிச்சேன். வீட்டு வாசல்ல தான் எப்பவும் விளையாடிட்டுருப்பேன். தனியா விளையாடி விளையாடி எனக்கு அப்பவே வாழ்க்கையே வெறுத்து போச்சுங்க. அப்போ தாத்தா சொன்னது ஞாபகம் வந்துச்சு. எனக்கு விளையாட ஒரு ஃப்ரெண்ட் கொடு கடவுளேனு வேண்டிக்கிட்டேன். அதுவும் நடந்துச்சுங்க.
        அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்தாங்க. அந்த வீட்லயும் என்னை மாதிரியே ஒரு வால் பையன் இருந்தான். அவன் பேர் வெங்கட் ராமகிருஷ்ணன். அவனுக்கும் என் வயசு தான். நான் விளையாடிட்டு இருந்தப்ப அவனும் கூட சேந்து விளையாட ஆரம்பிச்சான். அப்போ ஆரம்பிச்சது தான் எங்க ஃபிரண்ட்ஷிப். அப்புறம் ஸ்கூல்க்கு போற வரை 2 பேரும் ஒண்ணா தான் விளையாடுவோம். எங்க ஃபிரண்ட்ஷிப் பார்த்து எங்க அப்பா, அம்மா எங்களை ஒரே ஸ்கூல் சேத்தாங்க. ஒண்ணா தான் சாப்பிடுவோம், விளையாடுவோம், ஸ்கூல்க்கு போவோம். டிவின்ஸ் கூட எங்களோட போட்டி போட முடியாதுங்க.
         நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ ஒண்ணா தான் கத்துக்கிட்டோம். நாளுக்கு நாள் சேட்டை அதிகமாகி படிப்பு குறைஞ்சுருச்சு. ஸ்கூல் பாஸ் பண்ணுனதே பெரிய விஷயம் ஆயிருச்சு. இதுல 2 பேருக்கும் சாஃப்ட்வேர் இஞ்சீனியர் ஆகணும்னு வேற எய்ம். நாங்க வாங்குன மார்க் கு அது ஒண்ணு தான் கேடு. இருந்தாலும் நாங்க விடலையே. எங்க அப்பா அம்மா கிட்ட பேசி லஞ்சம் கொடுத்தாவது சேர முடிவு பண்ணிட்டோம். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. ஆனால் ஒரு கண்டிஷன் போட்டாங்க உன்னால் அவன் கெட்டான், அவனால நீ கெட்ட. இனிமேலாவது உருபடுற வழிய பாருங்க.அதுனால 2 பேரும் வேற வேற காலேஜ்ல தான் சேரணும்னு சொல்லிட்டாங்க. நாங்களும் ஒரு கண்டிஷன் போட்டோம்.
வேற வேற காலேஜ் ல சேந்தா ஒரு நாள் 2 பேரும் என் காலேஜ்க்கு போவோம். ஒரு நாள் அவன் காலேஜ்க்கு போவோம்னு சொன்னோம். உருப்படவே மாட்டீங்கணு திட்டிட்டு 2 பேரையும் ஒரே காலேஜ் லே சேத்து விட்டாங்க. எங்களுக்கு முன்னாடியே தெரியுங்க. நாங்க ஒரே காலேஜ்ல தான் சேருவோம்னு. எப்படி னு கேக்கரிங்களா. நாங்க தான் பிள்ளையார்கிட்ட வேண்டிக்கிட்டோமே. எனக்கு மட்டும் இல்லைங்க வெங்கட்கும் இந்த நம்பிக்கை இப்போ வரை இருக்கு. எங்களுக்கு பிடிக்காத விஷயம். எங்க 2 பேரோட பெயர் தான். அதை வச்சு ஸ்கூல்ல ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க. அதுனாலயே காலேஜ் போனதும் வெங்கட்,செந்தில் னு சுருக்கமா சொல்லிக்கிட்டோம்.
           காலேஜ்க்கு போய் நிறைய புது ஃபிரண்ட்ஸ் கிடைச்சாங்க. ஆனாலும் வெங்கட்கும் எனக்கும் நடுவுல யாரும் வரமுடியல. நாளுக்கு நாள் எங்க ஃபிரண்ட்ஷிப் அதிகமாயிட்டே போச்சு. பிட் அடிச்சா கூட ஒண்ணா தான் பிட் அடிப்போம். ஒரு நாள் நான் பிட் அடிச்சு மாட்டிக்கிட்டேன். வெளிய போக சொல்லிட்டாங்க. வெங்கட் எழுந்து சாரி ஸார் னு சொன்னான். அவன் பிட் அடிச்சதுக்கு நீ ஏன் டா சாரி சொல்லுறனு கேட்டார். அது இல்லை ஸார், நான் அந்த பிட் பேப்பர பாஸ் பண்ணுனப்பா பாத்துடிங்களோனு நெனைச்சு சாரி சொல்லிட்டேன் ஸார். அப்போ நீங்க அத பாக்கலையா. சாரி ஸார் னு சொன்னான். 2 பேரும் வெளிய போங்கடானு சொல்லிட்டாரு. ஹய்யா. ஜாலி னு 2 பேரும் சினிமாக்கு போய்டோம். இப்படியே 7 செமெஸ்டர் முடிஞ்சதுங்க. எங்களோட அர்ரீயர் எண்ணிக்கையோ மட்டும் குறையலை. கடைசி செமெஸ்டர் ல ரொம்ப முயற்சி பண்ணி கொஞ்சம் அர்ரீயர் கிளியர் பண்ணினோம். வேலைக்கு போனாலும் ஒரே கம்பெனி தான்னு முடிவு பண்ணிட்டோம். இன்னைக்கு தான் எங்க கனவு நிறைவேருச்சு.
           கனவு கண்டு கொண்டிருந்தவனையும், உறக்கத்தில் இருந்தவனையும் ஒரு கை தட்டி(திட்டி) எழுப்பியது. அது அவர்களின் கண்காணிப்பாளர். கோப்புக்களை பார்க்கும்படி எச்சரித்து சென்றார். அப்பொழுது சிரிப்பு சத்தம் அவர்களின் கவனத்தை திருப்பியது. அந்த சத்ததிற்க்கு சொந்தக்காரி ஒரு அழகான பெண்.திரும்பி பார்த்த இருவர் மனதிலும் விளக்கு(பல்பு) எரிந்தது. கோவில் மணி அடித்தது.(தம் ண தம் ண தம்) என்ற ஒலி கேட்டது. கண்ணா லட்டு தின்ன ஆசையா... (செந்திலுக்கு கேட்கும் மைண்ட் வாய்ஸ்)... கண்ணா உனக்கும் அதே லட்டு தின்ன ஆசையா (வெங்கட்க்கு கேட்கும் மைண்ட் வாய்ஸ்).
           அன்று முதல் அந்த பெண்ணை கவர முயற்சித்தனர். அந்த பொண்ணு பேர் சொப்னா. “ரெண்டு பேரும் ட்ரை பண்ணுவோம். அந்த பொண்ணு யார லவ் பண்ணுதோ விட்டு கொடுத்துடுவோம் னு முடிவு பண்ணாங்க.இருவர் மனதிலும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. முதல் காரணம் அவர்களின் பெயர்கள். அவர்களின் முழு பெயர்களை மறைத்து சுருக்கமாக செந்தில், வெங்கட் என்றே வெளியில் சொல்லிக்கொண்டனர். இரண்டாவது காரணம் அர்ரீயர். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைத்தனர்.
          ஒரு நாள் அவள் தோழி அவளை சொப்னா சொப்னா என நீண்ட நேரமாக அழைத்தாள். அவள் வேலையில் கவனமாக இருந்ததால் கவனிக்கவில்லை. சொப்பணசுந்தரி என கத்தி அழைத்தாள். அப்போது தான் செந்தில் அதை கேட்டு சிரித்து விட்டு, வெங்கட்டிடம் அவள் பெயர் சொப்பணசுந்தரி னு சொல்லி 2 பேரும் சேர்ந்து சிரித்தனர்.பல நாட்கள் முயற்சி செய்தும் இருவரும் காதலை சொல்லவில்லை.
           6 மாதங்கள் கழிந்தது. அர்ரீயர் எக்ஸாம் எழுத இருவரும் 1 வாரம் விடுப்பு எடுத்தனர். 1 வாரம் கழித்து அலுவலகம் வந்து பார்த்த போது சொப்னாவும் விடுப்பு எடுத்து சென்றிருப்பது தெரிய வந்தது. இருவருக்கும் மனதிற்குள் சின்ன பயம் வந்து விட்டது. அவளுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடக்குமோ என்று யோசித்தனர். இருவரும் பிள்ளையாரிடம் சென்று வழக்கம் போல வேண்டிக்கொண்டனர்.
           “பிள்ளையார் அப்பா எப்படியாவது சொப்னாவை எங்களை லவ் பண்ண வை” னு 2 பேரும் வேண்டிடுருக்கும் போதே கடுப்பான கடவுள் அவர்கள் முன்னாடி தோன்றி “ஒரே ஸ்கூல் கேட்டீங்க, கொடுத்தேன். ஒரே காலேஜ் கேட்டீங்க கொடுத்தேன். ஒரே கம்பெனி ல வேலை கேட்டீங்க. அதையும் கொடுத்தேன். இப்போ ஒரே பொண்ணு வேணுமா? நான் டென்ஷன் ஆகுறதுக்குள்ள ஓடிடுடுங்கனு” அவங்களை கடவுள் விரட்டினார். இருந்தாலும் விடாமல் மீண்டும் மீண்டும் பிள்ளையாரை தொல்லை பண்ணினார்கள். பிள்ளையாரும் இவர்கள் தொல்லை தாங்காமல் உங்க மூன்று பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று கூறிவிட்டு மறைந்தார்.
           அதுக்கப்புறம் பல முறை 2 பேரும் ட்ரை பண்ணுனாங்க (லவ்வ சொல்றதுக்கு). பல நாட்கள் முயன்றும் காதலை அவர்களால் சொல்ல முடியவில்லை. அர்ரீயர் கிளியர் பண்ண அடுத்த செமெஸ்டர் ஒரு 1௦ நாள் விடுப்பு எடுத்தாங்க. இவங்க விடுப்பு எடுத்த அதே நாட்கள் சொப்னாவும் விடுப்பு எடுத்திருந்தாள். அப்போது தான் அந்த படு பயங்கரமான உண்மை அவர்களுக்கு தெரிந்தது. இவர்கள் படித்த அதே பொறியியல் கல்லூரியில் படித்தவள் தான் அந்த சொப்னா என்பது. ஆம் அவர்களின் சீனியர் தான் இந்த சொப்னா என்ற சொப்ன சுந்தரி. இவர்கள் விடுப்பு எடுக்கும் ஒவ்வொரு முறையும் சொப்னாவும் விடுப்பு எடுக்க காரணம், அவளும் அர்ரீயர் எழுத சென்று இருந்தாள்.
              6 மாதங்கள் கழித்து அவங்க நினைச்சபடியே அவங்க 3 பேருக்கும் கல்யாணம் நடந்துச்சு. அதிர்ச்சி ஆகாதீங்க. 3 பேருக்கும் தனித்தனியா கல்யாணம் நடந்துச்சு. இப்போது செந்தில் மகனும், வெங்கட் மகனும் ஒன்றாக விளையாடுகிறார்கள்!!!. அவர்களும் தங்களுக்கு வேண்டியதை பிள்ளையாரிடமே கேட்டு இம்சை செய்கிறார்கள். ஸ்குரோல் பண்ணாதீங்க. கதை முடிஞ்சு போச்சு. bye

கண்ணனின் வருகை


        அன்று கோகுலாஷ்டமி... வீட்டில் குதூகலம் நிறைந்திருந்தது வாசல் முழுக்க கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை செல்லும் சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை கோலமிட்டுருந்தாள் வைஷ்ணவி. இனிப்புப் பலகாரங்கள், குறிப்பாக கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல் மற்றும் பழங்களை நிவேதனம் செய்வதற்காக தயார் செய்தாள்.
         சிவராமனுக்கு மூச்சு விட கூட நேரம் இல்லாத அளவு அன்று வேலை. இருப்பினும் வேலையின் ஊடே தன் மனைவி கூறியது நியாபகம் வர வேலைகளை அவசரமாக முடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல கிளம்பிய போது அவன் நண்பன் வினோத் வெளியில் செல்ல அழைத்தான். வீட்டில் கோகுலாஷ்டமி பூஜைக்கு மனைவி சீக்கிரம் வர சொல்லியிருப்பதாக கூறி விட்டு காலில் இறக்கை கட்டியிருப்பது போல பறந்தான்.
         நீல நிற புடவையில் தலை நிறைய மல்லி பூ வைத்து மலர்ந்த முகத்துடன் தன் கணவனின் வரவுக்காக காத்திருந்தாள் வைஷ்ணவி. எதிர்ப்பார்த்ததை போல சிவராமனும் சரியான நேரத்திற்கு வந்தான். வீட்டிற்குள் வந்ததும் மனைவியின் ஏற்பாடுகளை பார்த்து அசந்து போய் நின்றான் சிவா. சீக்கிரம் சென்று குளித்து விட்டு வரும்படி கூறினாள் வைஷ்ணவி. சிவராமனும் பூஜைக்கு தயாராகி வந்தான்.
        இருவரும் பூஜை செய்து விட்டு வெண்ணையை உண்டு விரதத்தை முடித்து கொண்டாள் வைஷ்ணவி. தான் செய்த பலகாரத்தை எடுத்து கணவனுக்கு உண்ண கொடுத்து விட்டு தானும் உண்டு கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் திடீரென வைஷ்ணவி தலை சுற்றுவதை போல உணர்ந்தாள். காலையில் இருந்து விரதமாக இருந்ததால் தான் இப்படி இருக்கிறது என எண்ணியவள் சிவராமனிடம் சொல்லவில்லை.
      வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கியவள் திடீரென மயங்கி விழுந்தாள். சற்றே அதிர்ச்சி அடைந்த சிவராமன் தண்ணீரை முகத்தில் அடித்து எழுப்பி உட்கார வைத்தான். சிறிது தண்ணீரை குடிக்க வைத்து என்ன ஆனது என விசாரித்தான். தலை சுற்றலாக இருக்கிறது என்று கூறிய அவளை மருத்துவமனைக்கு அழைத்தான். அவளோ காலையில் இருந்து உணவு உண்ணாதது தான் காரணம் என நினைத்துக்கொண்டு வர மறுத்தாள்.
          அவளை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் சிவராமன். மருத்துவர் அவளை பரிசோதித்து கொண்டு இருந்தார். தன் மனைவிக்கு காய்ச்சல், தலை வலி என்றாள் கூட தாங்க முடியாதவன் சிவராமன். வைஷ்ணவி மயங்கி விழுந்ததை எண்ணி பதற்றத்தில் மருத்துவரின் அறையின் வெளியே காத்திருந்தான் சிவராமன்.
         பரிசோதனை முடிந்து வைஷ்ணவி வெளியே வந்து தன் கணவனை அழைத்தாள். மருத்துவர் என்ன சொல்வாரோ என்று உள்ளே சென்ற சிவராமனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்!! உண்மையில் அது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி தான். மருத்துவர், சிவராமனிடம் உங்கள் மனைவி கர்ப்பமாக உள்ளார் என்று கூறியதும் இருவர் முகத்திலும் இன்ப அதிர்ச்சியே நிலவியது. வீட்டிற்கு சென்று தங்கள் சின்ன கண்ணனின் வருகையை எண்ணி கொண்டாடித் தீர்த்தான் சிவராமன்...