Friday 23 March 2012

கண்ணனின் வருகை


        அன்று கோகுலாஷ்டமி... வீட்டில் குதூகலம் நிறைந்திருந்தது வாசல் முழுக்க கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை செல்லும் சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை கோலமிட்டுருந்தாள் வைஷ்ணவி. இனிப்புப் பலகாரங்கள், குறிப்பாக கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல் மற்றும் பழங்களை நிவேதனம் செய்வதற்காக தயார் செய்தாள்.
         சிவராமனுக்கு மூச்சு விட கூட நேரம் இல்லாத அளவு அன்று வேலை. இருப்பினும் வேலையின் ஊடே தன் மனைவி கூறியது நியாபகம் வர வேலைகளை அவசரமாக முடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல கிளம்பிய போது அவன் நண்பன் வினோத் வெளியில் செல்ல அழைத்தான். வீட்டில் கோகுலாஷ்டமி பூஜைக்கு மனைவி சீக்கிரம் வர சொல்லியிருப்பதாக கூறி விட்டு காலில் இறக்கை கட்டியிருப்பது போல பறந்தான்.
         நீல நிற புடவையில் தலை நிறைய மல்லி பூ வைத்து மலர்ந்த முகத்துடன் தன் கணவனின் வரவுக்காக காத்திருந்தாள் வைஷ்ணவி. எதிர்ப்பார்த்ததை போல சிவராமனும் சரியான நேரத்திற்கு வந்தான். வீட்டிற்குள் வந்ததும் மனைவியின் ஏற்பாடுகளை பார்த்து அசந்து போய் நின்றான் சிவா. சீக்கிரம் சென்று குளித்து விட்டு வரும்படி கூறினாள் வைஷ்ணவி. சிவராமனும் பூஜைக்கு தயாராகி வந்தான்.
        இருவரும் பூஜை செய்து விட்டு வெண்ணையை உண்டு விரதத்தை முடித்து கொண்டாள் வைஷ்ணவி. தான் செய்த பலகாரத்தை எடுத்து கணவனுக்கு உண்ண கொடுத்து விட்டு தானும் உண்டு கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் திடீரென வைஷ்ணவி தலை சுற்றுவதை போல உணர்ந்தாள். காலையில் இருந்து விரதமாக இருந்ததால் தான் இப்படி இருக்கிறது என எண்ணியவள் சிவராமனிடம் சொல்லவில்லை.
      வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கியவள் திடீரென மயங்கி விழுந்தாள். சற்றே அதிர்ச்சி அடைந்த சிவராமன் தண்ணீரை முகத்தில் அடித்து எழுப்பி உட்கார வைத்தான். சிறிது தண்ணீரை குடிக்க வைத்து என்ன ஆனது என விசாரித்தான். தலை சுற்றலாக இருக்கிறது என்று கூறிய அவளை மருத்துவமனைக்கு அழைத்தான். அவளோ காலையில் இருந்து உணவு உண்ணாதது தான் காரணம் என நினைத்துக்கொண்டு வர மறுத்தாள்.
          அவளை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் சிவராமன். மருத்துவர் அவளை பரிசோதித்து கொண்டு இருந்தார். தன் மனைவிக்கு காய்ச்சல், தலை வலி என்றாள் கூட தாங்க முடியாதவன் சிவராமன். வைஷ்ணவி மயங்கி விழுந்ததை எண்ணி பதற்றத்தில் மருத்துவரின் அறையின் வெளியே காத்திருந்தான் சிவராமன்.
         பரிசோதனை முடிந்து வைஷ்ணவி வெளியே வந்து தன் கணவனை அழைத்தாள். மருத்துவர் என்ன சொல்வாரோ என்று உள்ளே சென்ற சிவராமனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்!! உண்மையில் அது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி தான். மருத்துவர், சிவராமனிடம் உங்கள் மனைவி கர்ப்பமாக உள்ளார் என்று கூறியதும் இருவர் முகத்திலும் இன்ப அதிர்ச்சியே நிலவியது. வீட்டிற்கு சென்று தங்கள் சின்ன கண்ணனின் வருகையை எண்ணி கொண்டாடித் தீர்த்தான் சிவராமன்...

No comments:

Post a Comment