Sunday 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -6


இரண்டு நாட்களில் கீர்த்தனாவும் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தாள். முன்பு போல வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள். அப்பாவின் இழப்பு அவளுக்கு ஈடு செலுத்த முடியாத ஒன்று. ஒரே மகள் என்பதாலும், ஆண் வாரிசு இல்லை என்பதாலும் இவளை ஒரு ஆணுக்கு இணையாகவே வளர்த்தார். அவளுடைய இந்த முன்னேற்றதிற்கு மிக முக்கிய காரணம் அவள் அப்பா மட்டுமே.

அவனுடைய வெளிநாட்டு பயண முடிவை பற்றியும், அவன் காதலை வீட்டில் கூறி சம்மதம் வாங்கியது பற்றியும் கீர்த்தியிடம் கூறினான். காதலுக்கு சம்மதம் கூறியதை எண்ணி மகிழ்ந்தாலும் அதே நேரத்தில் தன்னால் தான் அவனுடைய வெளிநாட்டு மேற்படிப்பு நிறுத்தப்பட்டது என்பது அவளுக்கு குற்ற உணர்ச்சியை தந்தது.

“கார்த்தி, விசா எல்லாம் வந்த பின்னாடி எதுக்கு இப்பிடி ஒரு முடிவை எடுத்த?. நீ US போ. படிச்சுட்டு திரும்பி வா. நான் உனக்காக காத்திருப்பேன். “

“நானும் உன்னை தனியா தவிக்க விட்டுட்டு போகணுமா கீர்த்தி. இப்பவே நீ உடைஞ்சு போயிட்ட டி. நானும் உன்னை விட்டு போனா தாங்குவியா? வேணாம். நான் இங்கே இருக்கேன். இங்கேயே என்னால நல்ல நிலைமைக்கு வர முடியும் கீர்த்தி. இப்போதைக்கு என்னோட வெளிநாட்டு படிப்பை விட உன் நிம்மதியும், சந்தோஷமும் தான் முக்கியம். உன்னை பழைய குறும்பு பண்ற கீர்த்தியா மாத்தணும்.“

“உன் நிழலாக
வரமுடியாவிட்டால் என்ன
வழிகாட்டியாக வருவேன்
வாழ்நாள் முழுதும்!!!”

அவன் கைகளை இறுக பிடித்து கண்களில் வைத்து, “ ஐ லவ் யு கார்த்தி” என்று அழுதாள்.
“எமோஷன் ஆகாத டா. எல்லாம் சரி ஆயிடும்”.

சில நாட்கள் நகர, யாரை சந்திக்க கூடாது என்று நினைத்தானோ அவளை தன் அலுவலகத்திலேயே சந்திக்கும்படி ஆனது. முதல் காதலி ஜெனி அவனுடைய அலுவலகத்திற்கு ஒரு நேர்முக தேர்வுக்காக வந்தாள். முதலில் ஜெனியை கண்டு அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் அவளுக்கு இந்த வேலை கிடைக்க கூடாது என்று கடவுளிடம் மனம் உருகி வேண்டினான். அன்றைய தினமே அவளுக்கு வேலை கிடைத்து கார்த்தியை சந்தித்து பேசினாள். கடவுளின் சோதனைகளில் இதுவும் ஒன்றோ.

“ஹாய் கார்த்தி. எப்பிடி இருக்க? இன்னும் அதே வேலையில தான் இருக்கியா?”

“ஆமா. இப்போ அதுக்கு என்ன? நீ இருந்த வேலையும் போய் தானா இங்க இன்டர்வியூக்கு வந்த. அப்புறம் என்ன?”

“ஹேய். நானா அந்த வேலை பிடிக்காம தான் வேலையை விட்டேன். நீ நினைக்கிற மாதிரி இல்லை. அதோட ஒரே வேலையில 9 வருஷமா உக்காந்து இருக்க நான் என்ன கார்த்தியா?”

“போதும். எனக்கு வேலை இருக்கு. நீ கிளம்புறியா”.


வார்த்தைகளில் எரிச்சலை கக்கினான் கார்த்தி. இருப்பினும் “பை கார்த்தி” என்று கூறி விட்டு கிளம்பினாள். 

No comments:

Post a Comment